மொன்றியலின் வட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு பாடசாலை பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த அந்த பேரூந்துகளில் 5 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 50 மாணவர்கள் பயணித்த நிலையில், அவர்களில் எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனவும், சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர மருத்துவப் பிரிவினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இரண்டு பாடசாலைப் பேரூந்துக்ள மற்றும் ஒரு கார் என மூன்று வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், St-Eustache பகுதியில் நெடுஞ்சாலை 640இல் நேற்று முற்பகல் பத்து மணியளவில் இந்த விபத்து நேர்ந்ததாகவும் கியூபெக் காவல்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த அந்த நெடுஞ்சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பாடசாலைப் பேரூந்து ஒன்று உரிய நேரத்தில் வாகனத்தை நிறுத்த முடியாமல் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதியதாகவும், அந்தப் பேரூந்து மீது பின்னல் வந்த பிறிதொரு பேரூந்து மோதியதாகவும், விபத்தினை அடுத்து இரண்டு பேரூந்துகளுமே தீப்பற்றி எரிந்ததாகவும், இரண்டு பேரூந்துகளும் முற்றாக சேதமடைந்துவிட்டதாகவும் கியூபெக் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.