பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணமான இயற்கை வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாண பெண் ஆர்வலரான கரீமா பலுச் என்ற பெண், கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிருக்கு அஞ்சி கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணவில்லை. அவர் இருப்பிடம் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி ரொறன்ரோ பொலிஸார் கேட்டு கொண்டனர்.
இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தநிலையில், கரீமா பலுச் கண்டெடுக்கப்பட்டுள்ளார். திடீரென அவர் உயிரிழந்தது தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக பேசி அங்கிருந்து தப்பி அகதியாக வசிக்கும் நபர் இறப்பது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் பலுச் பத்திரிகையாளர் சாஜித் உசைன் சுவீடன் நாட்டில் இறந்து கிடந்துள்ளார். அவர் கடந்த மார்ச் 2ஆம் திகதியில் இருந்தே உப்சாலா நகரில் இருந்து காணவில்லை.
தொடர்ந்து பலுசிஸ்தான் ஆர்வலர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது கவலை கொள்ள செய்கிறது என பலுசிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாண மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். இங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர்.
பாகிஸ்தான் இராணுவம் இங்கு வசிக்கும் மக்களை கடத்தி, கொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால், கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் ராணுவ அடக்குமுறைக்கு எதிராக பலுசிஸ்தானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் கரீமா பலுச் முக்கியமானவர்.
சுவிஸ்லாந்தில் நடந்த ஐ.நா. கூட்டத்தொடரில் கூட இராணுவ அடக்குமுறை விவகாரம் பற்றி எடுத்து பேசினார். கடந்த 2016ஆம் ஆண்டு உலகின் 100 செல்வாக்கான பெண்கள் பற்றிய பி.பி.சி.யின் பட்டியலில் கரீமா இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.