அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முக்கியமாக டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட, பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை பைடன் இரத்துச் செய்வார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
பைடன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் வெள்ளை மாளிகையின் தலைமைத் தளபதியாக வரவுள்ள ரொன் க்ளெய்ன் (Ron Klain) நேற்று வெளியிட்ட ஒரு குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் புதிய நிர்வாகம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமுல்படுத்திய பல கொள்கைகளில் மாறான மாற்றங்களைக் கொண்டுவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பு முயற்சிகள், பரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்றச் சட்டம் உள்ளிட்டவை அதில் அடங்குகின்றன.
அத்துடன், 2017இல் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவு சட்டரீதியான சவால்களுக்கு மத்தியில் பல முறை மாற்றப்பட்டதுடன் இதில் சில விடயங்களை உச்ச நீதிமன்றம் 2018இல் உறுதி செய்தது.
இதனால், பைடனின் பதவியேற்பினை அடுத்து, இந்த விடயம் தொடர்பான அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.