கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பேவ் பிரிஸ்மென் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தாம் இழைத்த தவறுகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நியூசிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டபோது ட்ரோன் கேமராக்களை கொண்டு அவர்களின் செயற்பாடுகளை உளவு பார்த்ததாக கனடிய மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பேவ் பிரிஸ்மென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் நியூசிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் முறைப்பாடு செய்திருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய கால்பந்தாட்ட நிறுவனம் பிரிஸ்மெனை பணியிடை நிறுத்தி இருந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மிகக் கடுமையான ஓர் காலத்தை தமது அணி வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும், அணி வீராங்கனைகள் சிறந்த பண்புகளை உடைய நேர்மையானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரிக்ஸ்மென் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால் பந்தாட்ட பேரவையினால் பிரிக்ஸ்மென் மற்றும் இரண்டு துணை பயிற்றுவிப்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கனடா மீது சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அபராதம் விதித்துள்ளது.