Reading Time: < 1 minute

13 வயதுச் சிறுவன் ஒருவர் செலுத்திச் சென்ற SUV ரக வாகனம் ஒன்று பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், வாகனத்தில் இருந்த பிறிதொரு 13 வயதுச் சிறுவன் உயிராபத்தான காயங்களுக்கு உள்ளான சம்பவம் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை 4:40 அளவில், Thornhill பகுதி, Dufferin Street மற்றும் Centre Street பகுதியில் சென்ற வாகனம் ஒன்றில் சந்தேகம் கொண்ட யோர்க் பிராந்திய காவல்துறையினர், அந்த வாகனத்தை நிறுத்த முயன்ற போதிலும் அது அங்கிருந்து தப்பியோடிச் சென்றுள்ளது.

அதனை அடுத்து யோர்க் பிராந்திய காவல்துறையினர் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற வேளையில், சுமார் 20 நிமிடத்தின் பின்னர், அதிகாலை ஐந்து மணியளவில், நோர்த் யோர்க்கின் Finch Avenue West மற்றும் Dufferin Street பகுதியில் அந்த வாகனம் எரிபொருள் கொள்கலனுடனான கனரக வாகனத்துடன் மோதுண்டுள்ளது.

இந்த மோதலின் போது வாகனத்தின் கட்டுப்பாட்டினை அதனை செலுத்திச் சென்ற சிறுவன் இழந்த நிலையில், வாகனம் அந்த வீதிச் சந்திப்பில் நின்றுகொண்டிருந்த GO பேருந்துடன் மோதியுள்ளது.

அந்த வானத்தில் பயணித்த 13 வயதுச் சிறுவன் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறுவன் சத்திரசிகிச்சைக்க உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது காயங்கள் உயிராபத்தானவை என்றே தோன்றுவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த வாகனத்தைச் செலுத்திச் சென்ற 13 வயதுச் சிறுவன் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான ஒரு வாகனத்தை 13 வயதுச் சிறுவன் செலுத்திச் செல்ல முடியாது என்ற நிலையில், எவ்வாறு இந்த வாகனம் அவரின் கையில் கிடைத்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த அந்த வாகனம் தன்னுடையது என்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் தந்தை தகவல் கூறியுள்ளார். தனது மகனை இரவு தனது வீட்டில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தான் உறங்கச் சென்றுவிட்டதாகவும், வாகனத்தின் சாவி தனது சட்டைப் பையில் இருந்ததாகவும், அதனை அடுத்து தனது மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அழைப்பு வந்ததாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மகனுக்கு பலமணிநேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், மகனின் காலைப் பாதுகாப்பதற்கு மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான அந்த வாகனம் மிகவும் அதிகமான வேத்தில் பயணித்ததாகவும், சிவப்பு சமிக்கை விளக்குகளில்கூட அது நிற்காமல் சென்றதை அவதானித்ததாகவும், அந்த வாகனத்தின் நகர்வினை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த விபத்துடன் உள்ளூர் காவல்துறையும் தொடர்புபட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாநில சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.