கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், ஆண்டுதோறும் இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து, நிரந்தர நேர முறையை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, நவம்பர் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடிகாரங்கள் ஒரு மணிநேரம் பின்னோக்கி மாற்றப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பாலான பகுதிகளில் நேர மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும், இந்த மாற்றத்தால் மருத்துவச் சந்திப்புகள், அறுவை சிகிச்சைகள், பிரசவ நேரங்கள் மற்றும் அலுவலகக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் எனத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, பழைய நேர மண்டல அமைப்புகளைப் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் கைப்பேசிகள் தானாகவே நேரத்தை ஒரு மணிநேரம் பின்னோக்கி மாற்றக்கூடும் என்பதால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சந்திப்புகள் தவறான நேரத்தில் காணப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வான்கூவர் கோஸ்டல் ஹெல்த் மற்றும் ஐலண்ட் ஹெல்த் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள், நோயாளிகள் தங்களது மருத்துவச் சந்திப்பு நேரங்களை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.
அதேவேளை, விக்டோரியா பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (UBC) ஆகிய கல்வி நிறுவனங்களும், முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட ஊழியர் சந்திப்புகள் மற்றும் கூட்டங்களின் நேரங்கள் தவறாகக் காட்டப்படலாம் என எச்சரித்துள்ளன.
மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய நேர மண்டலத்திற்கு ஏற்ப தங்களது மென்பொருட்களைப் புதுப்பித்துள்ளன. இருப்பினும், புதுப்பிப்புகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சில காலண்டர் பதிவுகளைப் பயனர்கள் கைமுறையாகச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டு முழுவதும் UTC-7 நேர மண்டலத்தைப் பின்பற்றவுள்ளன.
பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்தல், உடல்நலத்தை மேம்படுத்துதல் மற்றும் குளிர்கால மாலை நேரங்களில் கூடுதல் பகலொளியைப் பெறுதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிரந்தர நேர நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது கைப்பேசிகள், கணினிகள் மற்றும் மின்னணு காலண்டர்களில் சரியான நேரம் காட்டப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.