Reading Time: < 1 minute

தீவிர தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனேடிய மத்திய அரசாங்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2021-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை கனேடிய துணை பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்தார்.

கோவிட் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளுதல், தொற்றின் பின்னர் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 101.4 பில்லியன் டொலர் புதிய செலவீனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம் மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறை முடிவடைந்த ஆண்டிற்கு 354.2 பில்லியன் டொலராக இருக்கும் எனவும் 2021-22 நடப்பு நிதியாண்டில் இது 154.7 பில்லியன் டொலராக குறையும் எனவும் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் அறிவித்தார்.

தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வணிக மற்றும் சுகாதாரத் துறைக்கான உதவிகளை அதிகரித்தல், தேசிய சிறுவர், குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கு 30 பில்லியன் டொலர் செலுத்துதல், கூட்டாட்சி அரசின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல் மற்றும் பசுமை திட்டத்துக்கு 17.6 பில்லியன் டொலர் முதலீட்டை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.

கூட்டாட்சி பற்றாக்குறை முடிவடைந்த நிதி ஆண்டில் 354.2 பில்லியன் டொலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய 2021-22 ஆம் ஆண்டில் 154.7 பில்லியன் டொலராகக் குறையும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்டம் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல், பொருளாதார மேம்பாட்டுக்கான புத்திசாலித்தனமான, பொறுப்பான, இலட்சியத் திட்டமாகும். இது கோவிட்-19 மந்தநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ஃப்ரீலாண்ட் கூறினார்.

கனடா நாடாளுமன்றத்தில் ஒரு பெண் நிதியமைச்சர் சமர்ப்பித்த முதலாவது வரவு செலவுத் திட்டமாக இது அமைந்திருந்தது இதன் சிறப்பம்சமாகும்.

வாய்ப்புக்களை உருவாக்கி, வளர்ச்சியை உறுதி செய்து, பொருளாதாரத்தை மீட்டு கனேடியர்கள் மீண்டு வருவோம். நாங்கள் மீண்டெழுவோம் என தனது கன்னி வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசிய துணை பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்தார்.