உலக நாடுகள் சில, போர் என்ற பெயரால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கின்றன. அப்படிக் கொல்பவர்களை துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணிகளுக்கு அனுப்பிவைத்தால், ஒருவேளை உயிரின் மதிப்பை அவர்கள் உணரக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆம், ஒரு பெண்ணைக் காப்பாற்ற, இரண்டு நாட்டு மீட்புக் குழுவினர் போராடுவதையும், ஒரு உயிரைக் காப்பாற்றியதை அவர்கள் கொண்டாடுவதையும் காணும்போது மனம் நெகிழ்கிறது.
துருக்கியிலுள்ள அதியமான் என்ற நகரில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே 5 நாட்கள் சிக்கியிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்ற, துருக்கி நாட்டு மீட்புக்குழுவினருடன் இணைந்தனர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியைச் சேர்ந்த மீட்புக்குழுவினர்.
உயர் தொழில்நுட்ப கமெராக்கள் மற்றும் உபகரணங்களுடன் கனேடியர்களும் துருக்கி நாட்டு மீட்புக்குழுவினருடன் இணைந்து அந்தப் பெண்ணை மீட்டெடுத்தபோது, இறைவன் பெரியவன் என்ற முழக்கம் அப்பகுதியில் கேட்டது.
இடிந்த கட்டிடம் ஒன்றிற்குள், கதவு ஒன்றின்கீழ் சிக்கியிருந்த அந்த பெண்ணுக்கு சிறு துவாரம் மூலம் உணவும் தண்ணீரும் கொடுத்து, திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களாக குளிரில் தவித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தைரியமூட்டிக்கொண்டிருந்த மீட்புக் குழுவினர், நேற்று அந்தப் பெண்ணை மீட்டனர்.
திங்கட்கிழமையன்று துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய அந்த பயங்கர நிலநடுக்கம், 22,000க்கும் அதிகமானவர்களை பலிவாங்கியது.
100 மணிநேரத்துக்கும் மேல் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களைக் கூட போராடி மீட்டனர் மீட்புக் குழுவினர்.
அப்படி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. கனேடிய ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கனேடியர்களும் துருக்கி நாட்டு மீட்புக்குழுவினரும் இணைந்து ஒரு பெண்ணை மீட்டதும் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் காணலாம்.
தாங்கள் துருக்கி நாட்டவர்கள், கனடா நாட்டவர்கள் என்றெல்லாம் பார்க்காமல், இருநாட்டு மீட்புக்குழுவினரும் ஊடகவியலாளர்களும் அந்தப் பெண் மீட்கப்பட்டதும் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவதையும் கட்டியணைத்துக்கொள்வதையும் காணும்போது, இயற்கைப் பேரழிவுகளின்போது மட்டும் இப்படி ஒற்றுமையாக இருக்கும் மனிதர்கள், எப்போதும் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்னும் ஏக்கம் ஏற்படுதைத் தவிர்க்கமுடியவில்லை!