தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை.
கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்’ என கூறினார்.
அதேபோல், ஜி-7 மாநாட்டை ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரித்தானியாவும், ‘தலிபான்கள் மீது உலக நாடுகள் ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அதை விலக்குவதா வேண்டாமா என்பது குறித்து தலிபான்களின் போக்கை வைத்தே கணிக்க முடியும்’ என்று கூறியுள்ளது.