அமெரிக்காவில் இருந்து தரைவழியாக கனடாவுக்கு வருவோருக்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததுள்ளன.
புதிய கட்டுப்பாடுகளின் பிரகாரம் கனடாவுக்குள் நுழையும் அத்தியாவசிய பயணிகள் தவிர்ந்த அனைவரும் அமெரிக்காவில் 72 மணி நேரத்துக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அல்லது கனடா வருவதற்கு 14 முதல் 90 நாட்களுக்கு இடையில் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்ததற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
இதேவேளை, அமெரிக்காவிலிருந்து தரைவழி எல்லைகள் ஊடாக வரும் கனேடியர்களிடம் அண்மையில் எதிர்மறையாகப் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் இல்லாவிட்டால் எல்லைச் சேவை அதிகாரிகள் அவர்களை மீண்டும் திரும்பி அனுப்ப முடியாது.எனினும் அவா்கள் 3,000டொலர்களை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
அத்துடன், கனடாவில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அவா்கள் நேர்மறையாக பரிசோதனை செய்தால் சுகாதார அதிகாரிகளின் கண்டிப்பான வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கனேடியர்கள் அல்லாத அத்தியாவசியமற்ற பயணிகளுக்கு கனடாவில் தரைவழி எல்லைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
விமானம் மூலம் கனடா வரும் எவரும் மூன்று நாட்கள் சொந்தச் செலவில் விடுதிகளில் தங்கியிருந்து எதிர்மறையான பரிசோதனை முடிவுகளைப் பெற வேண்டும்.மூன்று நாட்களுக்குள் எதிர்மறையான சோதனை முடிவு வந்தாலும் அவர்கள் கட்டாய இருவார தனிமைபடுத்தலில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசிலில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் புதிய திரிபு நாட்டில் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளை கனடா அறிவித்துள்ளது.
மெக்ஸிகோ மற்றும் அனைத்து கரீபியன் பகுதிகளுக்கான விமான சேவைகளையும் ஏப்ரல்30வரை கனடா நிறுத்தியுள்ளது.
மேலும், அத்தியாவசியமற்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடிர்களை அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் புதிய திரிவுகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உதவும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மூன்றாவது அலை உருவாகுவதை யாரும் விரும்பவில்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.