கோவிட்19 தடுப்பூசி விநியோகங்களை முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் 643,000 பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கனடா பெற்றுள்ளது.
அத்துடன், மேலதிகமாக இலட்சக்கணக்கான தடுப்பூசிகளை வழங்க நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ள நிலையிலேயே தடுப்பூசி பணிகள் இரட்டிப்பாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி விநியோகங்களில் ஏற்பட்ட தாமதத்தால் கனடாவில் தடுப்பூசி போடும் பணிகளில் மந்த நிலை காணப்பட்டது. இந்நிலையில் இதை ஈடு செய்யும் வகையில் நாங்கள் வேகமாக செயற்பட வேண்டும் என ரொரண்டோ பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியர் கெர்ரி போமன் தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படியில் மூத்த குடிமக்களை இலக்குவைத்து தடுப்பூசித் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதுவரை கனடா முழுவதும் 20 இலட்சத்துக்கு அதிகமான பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 26 வரை இவற்றில் 84 வீதமான அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மார்ச் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் 444,000 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற கனடா எதிர்பார்க்கிறது. 2021 முதல் காலாண்டின் இறுதிக்குள் நான்கு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் ஒப்பந்தித்தின் பிரகாரம் இந்த விநியோகம் இடம்பெறவுள்ளது.
தடுப்பூசி விநியோகங்களை துரிதப்படுத்துவதன் ஊடாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய தரப்புக்களை நாங்கள் பாதுகாக்க முடியும். அத்துடன், கோவிட்19 இறப்பு வீதமும் குறையும் என பேராசிரியர் கெர்ரி போமன் தெரிவித்துள்ளார்.