டொராண்டோ நகரின் கடற்கரை பகுதிக்கு அருகில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரைத் டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குவீன்ஸ் குவே வெஸ்ட் மற்றும் டான் லெக்கி வே சந்திப்புக்கு அருகில், பாத்தர்ஸ்ட் வீதிக்கு சற்று மேற்கே சனிக்கிழமை மாலை 7:30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கத்திக் குத்துக்கு இலக்காகிக் காயமடைந்திருந்த ஆடவரைக் கண்டறிந்தனர்.
லோயர் ஸ்பேடினா அவென்யூவிற்கு அருகிலேயே இக்கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த டொராண்டோ அவசர மருத்துவப் பிரிவு, தீவிர காயமடைந்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். மாநிறமுடைய ஆடவர், 5 அடி 4 அங்குல உயரம், மெலிந்த உடலமைப்பு கொண்டவர்.
நீல நிறச் சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் 416-808-1400 என்ற இலக்கம் ஊடாக டொராண்டோ பொலிஸாரையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ அமைப்பையோ இரகசியமாகத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.