Reading Time: < 1 minute

கிரேக்கத்திற்கு வெளியே அயோனியன் கடலில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரில் பயணித்த ஆறு கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களில், நான்கு பேரின் உடல்பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புத் திணைக்களம் (டி.என்.டி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடல்பாகங்கள் வியாழக்கிழமை ஒன்ராறியோவின் தலைமை மரணவிசாரணை அதிகாரியால் நன்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

கேப்டன் கெவின் ஹேகன், (பிரிட்டிஷ் கொலம்பியாவின் நானாயிமோவைச் சேர்ந்த ஒரு விமானி), கேப்டன் மாக்சிம் மிரோன்-மோரின், (கியூபெக்கிலுள்ள பெக்கன்கூரைச் சேர்ந்த ஒரு விமான போர் அமைப்பு அதிகாரி), துணை லெப்டினென்ட். மத்தேயு பைக், (நோவா ஸ்கொட்டியாவின் ட்ரூரோவைச் சேர்ந்த கடற்படைப் போர் அதிகாரி) மற்றும் மாஸ்டர் கார்போரல் மத்தேயு கசின்ஸ் (ஒன்ராறியோவின் குயெல்ப் நகரைச் சேர்ந்த ஒரு வான்வழி மின்னணு சென்சார் ஆபரேட்டர்) ஆகியோர் அதில் அடங்குவர்.

மே 25ஆம் திகதி முதல் ஜூன் 2ஆம் திகதி வரை நடத்தப்பட்ட அமெரிக்க கடற்படையுடன் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது இந்த உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விபத்தில் இழந்த அனைத்து ஊழியர்களின் குடும்பங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்பாகங்கள் வரும் நாட்களில் குடும்பங்களுக்கு கையளிக்கப்படும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

நேட்டோப் பயிற்சிப் பணியில் பங்கேற்றபோது, ஹாலிஃபாக்ஸ் வகுப்பு கப்பல் எச்.எம்.சி.எஸ். ஃபிரடெரிக்டனின் பார்வையில், கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஸ்டால்கர் 22 என அழைக்கப்படும் ஹெலிகொப்டர், அயோனியன் கடலில் விழுந்து நொறுங்கியமை குறிப்பிடத்தக்கது.