Reading Time: < 1 minute

”மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் நேற்று அபிமன் 2024 நிகழ்வு நடைபெற்றது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வழங்கி வைத்தார்.

இதன்போது உறையாற்றிய ஜனாதிபதி, மக்களுடன் இணைந்து இந்த நாட்டை மீட்க முடியும் என்று தான் நம்பியதாகவும் ஏனைய நாடுகளைப் போன்று அன்றி, இரண்டு ஆண்டுகள் நிறைவடைய முன்பே நாட்டை மீட்டெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் நினைத்தனர் என்றும் ஆனால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தை ஆரம்பித்தோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்காலத்திற்கு முகங்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் திறன்களை வளர்த்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்க முறையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அனைவரும் இணைந்து புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் எமது பணியாளர்கள் அனுப்பப்படும் நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அந்தவகையில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் என்றும் அந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கமாக ஆதரவை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரே இடத்தில் தங்கி நிற்காமல் நாட்டின் எதிர்கால நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.