பிலிப்பைன்ஸூக்கு அண்மையில் சுற்றுலா சென்றிருந்து வௌிநாட்டவர்கள் சிலர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளான போதும், அதில் பயணித்த கனடா நாட்டவர் ஒருவர் அனைவரையும் காப்பாற்றியுள்ளார்.
20 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்ற படகொன்று சிபு மாகாணத்தில் உள்ள சிறிய தீவுப் பகுதிக்கு அருகில் பயணித்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது.
இதன்போது, சுற்றுலாப்பயணிகள் நீரில் தத்தளித்தனர். பெரும்பாலானவர்களின் கைத்தொலைபேசிகள் நீரில் மூழ்கியதால் செயலிழந்து போயின.
ஆனால் ஜிம் எம்டி என்ற கனடா நாட்டவர் வைத்திருந்த நீர் உட்புகாத ஸ்மார்ட் தொலைபேசி மாத்திரம் எந்தவித தடையும் இன்றி இயங்கியது.
இதன்காரணமாக, அவர் உடனடியாக பிலிப்பைன்ஸ் சுற்றுலாத் தளத்தின் அரச உதவி சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி விபத்து இடம்பெற்ற விடயம் தொடர்பாக அறிவித்தார். இந்த சம்பவத்தில் 16 வெளிநாட்டவர்களும், 4 உள்நாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
ஏனைய சுற்றுலாப் பயணிகளின் தொலைபேசிகள் செயலிழந்த போது, கனடா நாட்டவரின் கைத்தொலைபேசி மாத்திரம் இயங்கிய நிலையில், சூதாரித்துக் கொண்டு அனைவரையும் காப்பாற்றிய அவருக்கு, காப்பாற்றப்பட்டவர்களும், சமூக வலைத்தளவாசிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.