கனடாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ஏயார் கனடா நிறுவனம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சங்கள் உலகளவில் விமான பயணத்திற்கான தேவையை குறைத்துள்ளதால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் சீனாவுக்கான கூடுதல் விமானங்களை இரத்து செய்யத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ரொறன்ரோ வன்கூவர் மற்றும் மொன்றியல் ஆகிய இடங்களில் இருந்து ஏயார் கனடா பொதுவாக வாரத்திற்கு 33 விமானங்களை இயக்குகிறது.
தற்போது உயிரைக் கொல்லும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் செல்லும் அனைத்து விமானங்களையும் இன்றிலிருந்து நிறுத்துவதற்கு ஏயார் கனடா தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக ஏயார் கனடா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் மற்றும் கிடைக்கக்கூடிய பிற விமானங்களில் பயணம், அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட விருப்பங்கள் வழங்கப்படும்.
ஏயார் கனடா இந்த நிலைமைக்கு வருந்துகிறது மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் பயணத் திட்டங்களுக்கு கடுமையான இடையூறு விளைவித்ததற்கு மன்னிப்பு கோருகிறது’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களையும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமான நிறுவனம் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.