Reading Time: < 1 minute

உய்குர் முஸ்லிமகளை சீனா நடத்தும் விதம், இனப்படுகொலை என கனடாவின் நாடாளுமன்றில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சியான கென்சர்வேற்றிவ் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை, நேற்று (திங்கட்கிழமை) கனடா நாடாளுமன்றில் 266-0 என வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க் கட்சிகளும் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது முழு அமைச்சரவை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என அங்கீகரித்த இரண்டாவது நாடாக கனடா பதிவாகியுள்ளது.

உய்குர் முஸ்லிம்கள் மீதாக இனப்படுகொலை தொடர்ந்தால், 2022 குளிர்கால ஒலிம்பிக்கை சீனாவிலிருந்து வேறு இடத்திற்கு நகர்த்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் அழைப்பு விடுக்குமாறு சட்டமியற்றுபவர்கள் வாக்களித்துள்ளனர்.

சீனாவில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் பிற துருக்கிய முஸ்லிம்களும் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அல்லது இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சாட்சிகளிடமிருந்தும் அங்கிருந்து தப்பியவர்களிடமிருந்தும் தாம் கேட்ட சாட்சியங்கள் பயங்கரமானவை என கென்சர்வேற்றிவ் கட்சித் தலைவர் எரின் ஓ’டூல், நாடாளுமன்றில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், சீனாவில் உண்மையாக துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு இனப்படுகொலை நடக்கிறது. சீனாவின் தொலைதூர மேற்கு பிராந்தியமான சிஞ்சியாங்கில் உள்ள முகாம்களில் குறைந்தது ஒரு மில்லியன் முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை சட்டவாளர்களும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதை சீனா மறுத்துள்ளது. இந்நிலையில், கனடா கென்சர்வேற்றிவ் கட்சியின் தீர்மானத்தை நிராகரித்துள்ள கனடாவுக்கான சீனத் தூதர் காங் பீவு, சின்சியாங்கில் இனப்படுகொலை என்று சொல்வதற்கு எதுவும் நிகழவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீனா-கனடா உறவுகளுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தாதபடி, சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை கனடா நிறுத்த வேண்டும் என சீனத் தூதர் வலியுறுத்தியுள்ளார்.