அமெரிக்க வான்வெளியில்ல் பறந்த சீன இராட்சத பலூன் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனடா விமானிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மரமற்ற பரந்த புல்வெளி பிரதேசங்களான ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளின் மீது பறக்கும் விமானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அமெரிக்க வான்வெளியில் காணப்பட்ட பலூன்கள் போன்று சந்தேகத்திற்குரிய நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கவும் கோரியுள்ளனர்.
தொடர்புடைய கண்காணிப்பு பலூன் கனடா வான்வெளியிலும் காணப்பட்டுள்ளது எனவும், ஆனால் எப்போது, எவ்வளவு காலம் என்ற விவரங்கள் கனேடிய அதிகாரிகளால் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தான், கல்கரி, எட்மண்டன், ரெஜினா, சாஸ்கடூன், வின்னிபெக், தண்டர் பே, ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் கியூபெக் நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பறக்கும் விமானிகள் அதிக கவனம் செலுத்தவும் விழிப்புடன் செயல்படவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, மேற்கு ஆல்பர்ட்டா மற்றும் கிழக்கு கியூபெக்கிற்கு இடையே உள்ள பல சிறிய பிராந்திய விமான நிலையங்கள் தொடர்பிலும் இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. வியாழன் மதியத்திற்கு மேல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது பிப்ரவரி 6ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றே கூறுகின்றனர்.