வட-கிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்து கனேடிய பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக இவரது நான்கு வயது மகளை விடுவித்ததைத் தொடர்ந்து இப்பெண்ணும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கனடா உறுதி செய்துள்ளது.
முன்னாள் அமெரிக்க தூதரின் உதவியுடன் அந்தப் பெண் சிரிய அல்-ரோஜ் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி இப்போது ஈராக்கின் எர்பில் என்ற இடத்தில் உள்ளார்.
குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் உள்ள முகாம்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களது குடும்பத்தினர் பெருமளவானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குர்திஷ் அல்-ரோஜ் தடுப்பு முகாமில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 08 கனேடிய ஆண்கள், 25 க்கும் மேற்பட்ட கனேடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய பெண் குறித்த தனிப்பட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. எட்மண்டனைச் சேர்ந்த இப்பெண் 2014 ஆம் ஆண்டளவில் கனடாவை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரான அவரது கணவர் சிரிய போரில் கொல்லப்பட்டார் எனவும் தெரியவருகிறது.