கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் (Carolyn Bennett) செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புகையிலை பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும் என சுட்டிக்காட்டினார்.
அதோடு சமூக சூழ்நிலைகளால் ஒரு முறை சிகரெட் புகைக்க செல்லும் இளைஞர், சிகரெட் பாக்கெட்டின் மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களை புறந்தள்ளி விட்டு செல்கிறார். இது தவிர்க்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை பற்றிய புதிய மாற்றத்திற்கான ஆலோசனை காலம் இன்றில் இருந்து தொடங்க இருக்கிறது. வருகிற 2023ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இருந்து புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என கனடா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அதேசமயம் அந்த சிகரெட்டுகளின் மீது பதிக்கப்படும் சரியான வாசகம் மாற்றப்படலாம் என கூறியுள்ள பென்னட் தற்போது, ஒவ்வொரு முறை இழுக்கும்போதும் விஷம் உள்ளே செல்கிறது என்ற வாசகம் ஒப்புதலுக்காக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை கனடாவின் இந்த நடைமுறையால் உலக அளவில், ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.