Reading Time: < 1 minute

சார்லசை மன்னராக ஏற்றுக்கொள்வது குறித்து கனேடிய மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

மகாராணியார் இரண்டாம் எலிச்பெத் மறைந்ததிலிருந்தே மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் காமன்வெல்த் நாடுகள் பலவற்றில் மேலோங்கத் துவங்கிவிட்டன.

நமக்கு மன்னர் எதற்கு, சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராவது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது, அவரை நாம் ஏன் மன்னராக ஏற்றுக்கொள்ளவேண்டும், சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன என்னும் கருத்துக்கள் கனடாவிலும் உருவாகத் துவங்கியுள்ளன.

மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஆனால், பிரித்தானிய மன்னர் ஏன் நம்முடைய நாட்டின் தலைவராக இருக்கவேண்டும் என மக்கள் யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.

ஏப்ரலில், the Angus Reid Institute என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், கனேடியர்களில் ஐந்தில் மூன்று பேர், சார்லசை தங்கள் நாட்டின் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பது தெரியவந்தது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 64 சதவிகித கனேடியர்கள், அரசு நிகழ்ச்சிகளில் மன்னர் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்வதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறியுள்ளார்கள்.

62 சதவிகித கனேடியர்கள், கனடா பணத்தில் சார்லஸ் உருவத்தை பொறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

சார்லசுடைய முடிசூட்டுவிழாவைப் பொருத்தவரை, தங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என 73 சதவிகிதம் கனேடியர்களும், சார்லசுடைய முடிசூட்டுவிழா மே மாதம் 6ஆம் திகதி நடப்பதே தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்கள்.

ஆக, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவைத் தொடர்ந்து, ஜமைக்கா, பார்படாஸ் போன்ற நாடுகள் மட்டுமின்றி, மேலும் பல நாடுகள் மன்னராட்சி வேண்டாம் என அறிவிக்கும் நிலை வரக்கூடும். ஆனால், கனடா அவற்றில் ஒன்றாக இருக்குமா?