Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் தொற்று நோயால் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுவரும் ஒன்ராறியோ மாகாணத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து மாணவர்கள் வருவதற்குத் தடை விதிக்க கனேடிய மத்திய அரசு தயாராகி வருகிறது.

ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் விடுத்த கோரிக்கையை அடுத்து சா்வதேச மாணவர்கள் மாகாணத்துக்குள் வர தடை விதிக்கப்படவுள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

எனினும் எப்போது இந்தத் தடை அமுலுக்கு வரும் என்பது குறித்து இதுவரை உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பி .1.617 புதிய திரிபு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 36 பேர் ஒன்ராறியோ மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து ஒன்ராறியோவுக்கான அத்தியாவசியமற்ற வெளிநாட்டவர்கள் பயணங்களை தடை செய்யுமாறு முதல்வர் போர்ட் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவாவை தளமாகக் கொண்ட கல்விக்கான சர்வதேச பணியகத்தின் (CBIE) கருத்துப்படி 2020 ஆம் ஆண்டில் கனடாவில் 5 இலட்சத்து 30 ஆயிரத்து 540 சர்வதேச மாணவர்கள் இருந்தனர். அவர்களில் அதிகபட்சமாக 34 வீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீனா மாணவர்கள் 22 வீதமாகப் பதிவாகியிருந்தனர்.

இவா்களில் அதிகபட்சமானவர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வி கற்கின்றனர். 242,825 மாணவா்கள் ஒன்ராறியோவில் கல்வியைத் தொடர்ந்து வந்தவர்களாவர். இது ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவர்களில் 46 வீதமாகும்.

இதற்கிடையில் கனடாவில் இதுவரை 1.22 மில்லியன் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 24,219 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

ஒன்ராறியோவில் மட்டும் 4 இலட்சத்து 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 8,050 கொரோனா மரணங்களும் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.