சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது கொக்கைன் போதைப்பொருளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் பெயரைப் போலீசார் வெளியிடவில்லை என்றாலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 2025-இல், கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 19 வயதான ஜேட் என்ற பெண் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கொக்கைனுடன் பிடிபட்டார். கனடாவின் பியர்சன் விமான நிலையத்தின் சோதனைகளில் சிக்காமல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் போதைப்பொருள், ஹாங்காங் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்கு மாத காலத்தில் ஹாங்காங்கில் பிடிபட்ட 4 கனடியர்களில் ஜேடும் ஒருவர். இவர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 100 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சர்வதேச பொதிகள் அனுப்புபவர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பயணத்திற்கு 5,000 டொலர் சம்பளம் மற்றும் இலவச விமானக் கட்டணம், தங்குமிடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்குத் தெரியாமலேயே நகை அல்லது பிற பொருட்கள் என நம்ப வைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பிடிபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.