கோவிட்19 தொற்று நோயால் இறந்தவர்களை நினைவு கூரும் தேசிய நினைவு தினம் இன்று கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. கோவிட்-19 தொற்று நோய் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பால் பிரகடணப்படுத்தப்பட்டு இன்று ஓரு வருடம் நிறைவு பெற்றது. இதனையொட்டி இந்நாள் கனடாவில் தேசிய நினைவு நாாளக பிரகடணப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கோவிட்19 தொற்று நோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்து நேற்று பொதுமன்றத்தில் பேசிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 11, 2020 கனடாவில் வாழ்க்கையை மாற்றிய நாளாக எப்போதும் நினைவுகூரப்படும் என்றார்.
மிக மோசமான துயரத்தைத் தந்த தொற்று நோய் இழப்புக்களுக்கு மத்தியிலும் கனேடியர்கள் விடாமுயற்சி, ஒற்றுமை மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் அவா் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்று நோயால் உயிரிழந்த ஒவ்வொரு கனேடியரும் நினைவு கொள்ளப்படுவார்கள். தொற்று நோய்க்கெதிராக முன்னணியில் நின்று போராடும் ஒவ்வொரு மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களின் சேவையும் ஒருபோதும் மறக்கப்படாது. நாங்கள் இன்றும் நாளையும் எப்போதும் ஒன்றாக, வலுவாக இருப்போம் எனவும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.
கோவிட்19 உலகப் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட ஒராண்டு நிறைவு நாளான இன்று வரையில் உலகெங்கும் தொற்று நோயால் 118 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.
கனடாவில் இன்றுவரை 896,000 க்கும் மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். 22,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கனடா பொது மன்றத்தில் இன்று இடம்பெற்ற நினைவு நிகழ்வில் கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொற்றுநோய் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உளநல மற்றும் பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட கனடியர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
பதட்டம் அல்லது இளையவர்களின் உள ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. அனைத்து கனேடியர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது எனவும் ஓ’டூல் கூறினார்.
தனக்கு தனிப்பட்ட முறையில் உதவியதாக முன்னணி சுகாதார துறையினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஓ’டூலும் அவரது மனைவியும் 2020 செப்டம்பரில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டனர்.
இதேவேளை, கனடாவில் தடுப்பூசி பணிகளில் உள்ள மந்த நிலையை அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசிகளை விரைவுபடுத்துவதன் மூலம் இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்ப முடியும் என அவர் தெரிவித்தார்.
இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் கோவிட்-19 தடுப்பூசி ஒன்றைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் உலகளவில் தடுப்பூசித் திட்டங்களை முன்னெடுக்கும் வேகத்தில் கனடா 55 ஆவது இடத்தில் உள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கனடியர்கள் அனைவரையும் போலவே மந்தமான தடுப்பூசித் திட்டத்தால் நாங்கள் விரக்தியடைகிறோம். ஆனால் கனேடியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.