கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் போது, வெளிநாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொண்ட கனேடிய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் தொடர்ச்சியான பயண ஆலோசனைகளைப் புறக்கணித்த பல பிராந்தியங்களைச் சேர்ந்த மத்திய மற்றும் மாகாணப் பிரதிநிதிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் பயணம் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலில், நோயுற்ற தன் பாட்டியைப் பார்க்கக் கிரேக்கத்திற்குச் சென்ற மானிடோபா என்டிபி நாடாளுமன்ற உறுப்பினர் நிகி ஆஷ்டன் மற்றும் கலிபோர்னியாவுக்குச் சென்ற கல்கரி கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் ரான் லிபெர்ட் ஆகியோர் அடங்குவர்.
கரீபியன் தீவான செயின்ட் பார்ட்ஸ்-இல் விடுமுறையில் சென்ற பின்னர் ஒன்றாரியோ நிதி அமைச்சர் ரோட் பிலிப்ஸ் பதவி விலகினார். அதே நேரத்தில் கியூபெக் லிபரல் கட்சியின் தேசியச் சட்டமன்ற உறுப்பினர் பியர் ஆர்காண்ட் பார்படாசுக்கு விடுமுறையில் சென்றார்.
கோயலிஷன் அவெனீர் கியூபெக் கட்சியின் தேசியச் சட்டமன்ற உறுப்பினர் யூரி சாசின் பெருவில் உள்ள தனது கணவரைப் பார்க்க ஒரு பன்னாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். சஸ்காட்செவன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோ ஹர்கிரேவ் கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ்க்குச் சென்றார்.
அல்பர்ட்டாவில், ஒன்பது வெவ்வேறு அதிகாரிகள் சமீபத்தில் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நகராட்சி விவகார அமைச்சர் ட்ரேசி அலார்ட், ஜேசன் கென்னியின் தலைமைத் தலைவர் ஜேம்ஸ் ஹக்காபே மற்றும் இரண்டு கல்வி அமைச்சின் பத்திரிகை செயலாளர்கள் உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பாட் ரெஹ்ன், ஜெர்மி நிக்சன், தான்யா ஃபிர் மற்றும் ஜேசன் ஸ்டீபன் ஆகியோரும் நாட்டுக்கு வெளியே பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.