கனடாவில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குளிர்காலம் காரணமாக பகல் நேரம் குறைவடைந்துள்ளது என்பதுடன் இரவு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
இருள்சூழ்ந்த நேரத்தை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் ஏணியை பயன்படுத்தி ஏறி கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர்களில் ஒருவரை பொலிஸார் ஹெலிகொப்டர் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
ஏணி ஒன்றை பயன்படுத்தி வீட்டின் மீது ஏறி கொள்ளையிட இரண்டு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
பாதுகாப்பு கமரா மூலம் இதனை கண்ட வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சந்தேக நபர்கள் இரண்டு திசைகளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது ஹெலிகொப்டர் மூலம் பின்தொடர்ந்து ஒரு சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஏனைய சந்தேக நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் மாடிகளின் கதவுகள் யன்னல்களையும் நன்றாக மூட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வீட்டில் இல்லாத போது மின் விளக்குகளை குறைந்த வெளிச்சத்தில் ஒளிர விடவும், வீட்டின் முற்றத்தில் பனி படர்ந்திருந்தால் அயலவர்களின் உதவயுடன் அவற்றை அகற்றவும், தபால்களை நண்பர்களின் உதவியுடன் எடுத்து வைக்கவும், சீ.சீ.ரீ.வீ கமராக்களை பொருத்தவும் என பொலிஸார் வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.