உலகம் முழுவதும் உயிர்களைக் காவுகொண்டுவரும் கொரோனொ வைரஸ் (COVID-19) நெருக்கடியிலிருந்து கனேடியர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதன்படி, 25 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பாரிய உதவித் திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக Cottage இல் உள்ள பிரதமர் இல்லத்துக்கு வெளியில் ஊடகங்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த உதவித்திட்டம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இது, வேலைவாய்ப்பு காப்பீடு மற்றும் கனடா குழந்தைகள் நன்மை உள்ளிட்ட தற்போதைய பாதுகாப்புத் திட்டங்களின் ஊடாக வழங்கப்படும் எனவும் பாரிய திட்டமெனவும் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவைளை, அவசரகால பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டுவர பாராளுமன்றத்தைக் கூட்டுவது குறித்து ஆலோசிப்பதாகவும் ஏப்ரல்-30 வரி செலுத்தும் காலக்கெடுவை நீடிக்கவுள்ளதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வைரஸ் தாக்கத்திலிருந்து கனேடியர்களை விரைவில் பாதுகாப்பிற்குள் கொண்டுவர பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.