கனடா – யூகோன் பிரதேசத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதான பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட செல்வந்த தம்பதியர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
சூதாட்ட மையம் ஒன்றின் நிர்வாக அதிகாரியான ரோட்னி பேக்கர் மற்றும் அவரது மனைவி எகடெரினா பேக்கர் ஆகியோர் யூகோன் பிரதேசத்திற்கு வாடகை விமானம் ஒன்றை அமர்திச் சென்றுள்ளனர். அங்கு தம்மை முன்களப் பணியாளர்கள் எனத் தெரிவித்து கொரோனா தடுப்பூசியை அவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் யூகோனில் அவர்களுக்கு 2,300 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பணக்கார தம்பதியினரான அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகக் குறைவு என சமூகத் தலைவர்கள் வாதிட்டு வருகின்றனர்.
இந்தத் தம்பதியரின் செயல் கடும் எதிர்ப்பலைகளைத் தூண்டியுள்ள சிலையில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும் யூகோன் சமூக சேவை அமைச்சர் ஜோன் ஸ்ட்ரைக்கர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தம்பதியரின் சுயநல நடத்தை குறித்து நான் ஆத்திரத்தில் உள்ளேன். யூகோனர்கள் அனைவரும் இதனால் சீற்றம் அடைந்துள்ளனர் எனவும் அமைச்சர் ஜான் ஸ்ட்ரைக்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதேவேளை, ஏமாற்றி தடுப்பூசி பெற்றுக்கொண்ட தம்பதியினர் தொடர்பில் கனேடிய பழங்குடியினர் விவகார அமைச்சர் மார்க் மில்லரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவா்கள் செல்வந்தர்களாக இருக்கலாம். அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்து ஆபத்தான பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றதை ஏற்க முடியாது எனவும் அவா் தெரிவித்தார்.