கனடாவில் சுமார் ஐந்து லட்சம் டாலர் பெருமதியான களவாடப்பட்ட நகைகளை யோர்க் பிராந்திய போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து இந்த தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
டொரன்டோவைச் சேர்ந்த 26 வயதுடைய நிக்கோலாய் ஒயின்ஸிகியூ மற்றும் இசாயுரா எலெசான்றோ ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
டொரண்டோ பெரும்பாகம் மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் இந்த இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் மூலம் தெரிய வந்துள்ளது.
முதியவர்கள் உடன் நெருங்கி பழகி அவர்களிடம் இருக்கும் நகைக்கு பதிலாக போலி நகைகளை அந்த இடத்தில் வைத்து கொள்ளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் பலவந்தமான அடிப்படையிலும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், நெக்லஸ்கள், பென்டன்கள் மற்றும் நாணயக் குற்றிகள் என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆபரணங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யோக் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
சரியான உரிமையாளரை அடையாளம் கண்டு அவரிடம் இந்த ஆபரணங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட ஆபரணங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுடைய ஆபரணங்களை பெற்றுக் கொள்ள முடியும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
சரியான ஆதாரங்களை காண்பித்து ஆபரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.