கிரேக்கத்தில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரின் பாகங்களை கண்டுபிடிக்க, அமெரிக்க கடற்படை உதவியை கனடா, நாடியுள்ளது.
ஹெலிகொப்டரை சுமார் 3,000 மீட்டர் நீரில் இருந்து மீட்டெடுக்கும் திறன் கனேடிய இராணுவத்திற்கு இல்லை என்பதால், அமெரிக்காவிடம் இந்த உதவி கோரப்பட்டுள்ளதாக கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக் ரூலூ விளக்கம் அளித்துள்ளார்.
நேட்டோப் பயிற்சிப் பணியில் பங்கேற்றபோது, ஹாலிஃபாக்ஸ் வகுப்பு கப்பல் எச்.எம்.சி.எஸ். ஃபிரடெரிக்டனின் பார்வையில், கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஸ்டால்கர் 22 என அழைக்கப்படும் ஹெலிகொப்டர், அயோனியன் கடலில் விழுந்து நொறுங்கியது.
அந்த ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு ஆயுதப்படை உறுப்பினர்களின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. நால்வர் மாயமாகினர்.
ஹெலிகொப்டர் கடலில் விழுந்த போது, சைக்ளோன் ஹெலிகொப்டரின் விமான-தரவு மற்றும் குரல் பதிவுகள் ஹெலிகொப்டரில் இருந்து பிரிந்த பின்னர் கண்டெடுக்கப்பட்டன. மேலும் தரவுகள் இப்போது தேசிய ஆராய்ச்சிக் குழுவால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
முக்கியமான பாகங்களை ஆராய்வது விபத்துத் தொடர்பான முக்கியமான தடயங்களை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த பின்னணியிலேயே அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.