கனடாவில் இரண்டு வெவ்வேறு வகையான தடுப்பூசிகளைக் கலந்து பெற்றவர்கள் முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களாகக் கருத்தில் கொள்ளப்படுவார்கள் என அமெரிக்கர்களுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.
கனடாவுடனான அமெரிக்க எல்லை நவம்பம் ஆரம்பத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பெற்றவர்களும் முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களாக் கருதி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலவையாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. எனினும் இது ஏனைய நாடுகளில் பரவலாக நடைமுறையில் உள்ளதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கனடா மற்றும் வேறு சில நாடுகள் அஸ்ட்ராஜெனெகா போன்ற தடுப்பூசிகளுடன் இரண்டாவதாக பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கலந்து போட அனுமதித்துள்ளன.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட – கிட்டத்தட்ட நான்கு மில்லியன் கனடியர்கள் கலப்பு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, கனடாவுடனான எல்லைகளை மீண்டும் திறக்கும் அமெரிக்காவின் அறிவிப்பு மூலம் 19 மாதங்களாக நீடித்த எல்லை மூடல் முடிவுக்கு வருகிறது.
2020, மார்ச் 21 கொரோனாவை பெருந்தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து 10 நாட்களில் பின்னர் அமெரிக்கா- கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.