Reading Time: < 1 minute

கர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த வழக்கில், ரொறன்ரோ மத போதகரின் மேல்முறையீடு இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஜனவரியில் பிலிப் கிராண்டினுக்கு வழங்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை மீது அவர் முன்னெடுத்த மேல்முறையீடு ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே கிராண்டினுக்கு பிணையும் அளிக்கப்பட்டது. 2011ல் கிராண்டினின் மனைவி அன்னா கரிஸ்ஸா தங்கள் வீட்டு குளியலறை தொட்டியில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தின் போது 20 வார கர்ப்பிணியாக இருந்த கரிஸ்ஸா உடலில் Ativan என்ற மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அது அவருக்கு பரிந்துரைக்கப்படாத மருந்து எனவும் உறுதி செய்யப்பட்டது.

மட்டுமின்றி, மத போதகரான கிராண்டினுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கரிஸ்ஸா கண்டறிந்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் பிலிப் கிராண்டின் மீது முதல் நிலை வழக்கு பதியப்பட்டு, 2014ல் அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது. தொடர்ந்து முன்னெடுத்த மேல்முறையீட்டில் அவர் வெற்றி பெற்றதுடன், 2019ல் மீண்டும் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.