18 மாதங்களுக்கும் மேலாக சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் தொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு, பொறுப்பற்றது என சீனா மறுத்துள்ளது.
ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக தடைகளை மீறியதாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் சீன அரசு கனடாவைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது எனும் குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்தார்.
எனினும், சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கனடா பிரதமர் பொறுப்பற்ற முறையில் எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். கனடாவில் நடந்த கைது சம்பவத்துக்கும் சீனாவில் நடந்த கைது சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் நாட்டில் விதிமீறல்களில் ஈடுபட்டோர் மீது எங்கள் சட்ட திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாத மற்றொரு பிரச்சினையுடன் இதை தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல’ என கூறினார்.
முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் டிசம்பர் 2018ஆம் ஆண்டு முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.