கனேடிய ஆயுதப் படையினரில் 90% பேர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக மேற்கு கனடாவில் உள்ள சிரேஷ்ட இராணுவத் தளபதி ஜெனரல் பில் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரச பணியாளர்களுக்கான கனடாவின் கட்டாய தடுப்பூசி திட்டத்துக்கு கனேடியப் படையினரிடமிருந்து குறிப்பிடத்தக்களவு எதிர்ப்புக்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.
இராணுவத்தினர், வங்கிப் பணியாளர்கள், விமான நிறுவன பணியாளர்கள் உட்பட மத்திய அரச துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி கட்டாயம் என கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரச ஊழியர்கள் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே கனேடிய ஆயுதப் படையினரில் 90 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக மேற்கு கனடாவில் உள்ள சிரேஷ்ட இராணுவத் தளபதி பில் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கு கனடாவின் 3-ஆவது கனேடிய ஆயுதப் படை பிரிவுக்கு பொறுப்பாக பில் பிளெட்சர் உள்ளார். அவரது கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட 12,000 படையினர் உள்ளனர்.
பொதுச் சேவை ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை நாங்கள் பின்பற்றுவோம் என எட்மண்டனில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சிரேஷ்ட இராணுவத் தளபதி பில் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு என்ன நடக்கும்? என்பது குறித்து தன்னால் கருத்து கூற முடியாது என அவா் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்கள் ஒக்டோபர் 29-க்குள் தடுப்பூசி போடப்படாவிட்டால் அவா்கள் சம்பளமற்ற விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.