Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோவில் பெண் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவரில் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டெல்டா பகுதியை சேர்ந்த 24 வயது ஜஸ்பிரீத் சிங் என்பவரே தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார். கனடா முழுவதும் தேடப்பட்டுவரும் நபர்களில் ஜஸ்பிரீத் சிங்கும் ஒருவர்.

இவர் மீது கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்டது மற்றும் குற்றத்தைச் செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தேடப்படும் இன்னொரு குற்றவாளியான 23 வயது சுக்ப்ரீத் சிங் தொடர்பில் பொலிசார் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.

மேலும், ஒரு சட்டத்தரணியை அமைத்துக்கொண்டு அதிகாரிகள் முன்பு சுக்ப்ரீத் சிங் சரணடைய வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில், கடத்தப்பட்டுள்ள பெண்ணின் முன்னாள் காதலன் உட்பட ஐவர் கைதாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 2021 டிசம்பர் மாதம் தொடர்புடைய பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடத்தல் முயற்சி தோல்வியடைந்த நிலையில் 37 வயதான Elnaz Hajtamiri தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவரது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 40 தையல் போடப்பட்டதாகவும், சம்பவயிடத்தில் இருந்து திருட்டு வாகனம் ஒன்றில் இரு சந்தேக நபர்கள் மாயமானதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்கு பின்னால், ஜனவரி 12ம் திகதி 2022ல் பொலிஸ் வேடத்தில் வீட்டுக்குள் புகுந்த மூவர் குழு Elnaz Hajtamiri-ஐ கடத்தியுள்ளது. இதன் பின்னர், Elnaz Hajtamiri நிலை என்ன ஆனது என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.