Reading Time: < 1 minute

கனேடிய இளம்பெண் ஒருவர் முதன்முறை வாங்கிய லொட்டரிச் சீட்டிலேயே அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

ஒன்ராறியோவில் வாழும் ஜூலியட்டை (Juliette Lamour, 18) லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கும்படி ஆலோசனை கூறியுள்ளார் அவரது தந்தை.

அதன்படி ஜூலியட் வாங்கிய முதல் லொட்டரிச் சீட்டிலேயே அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

இளம் வயதில் லொட்டரியில் பரிசு வென்ற எத்தனையோ பேர் பணத்தால் சீரழிந்ததைக் குறித்த செய்திகளைக் கேட்டிருக்கிறோம்.

ஆனால், கோடீஸ்வரியாக ஆகியுள்ள நிலையிலும், வானத்தில் பறக்கவில்லை ஜூலியட். இந்தப் பணத்தை என்ன செய்வது என முதலில் தன் தந்தையிடம்தான் ஆலோசனை கேட்டுள்ளார் அவர். ஜூலியட்டின் தந்தை நிதி மேலாண்மை பணியில் இருப்பவர் ஆவார்.

லொட்டரியில் பரிசு கிடைத்த தகவல் கிடைத்ததுமே, உடனே நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என அவர் வேலை பார்க்கும் இடத்தின் உரிமையாளர் கூறினாராம். ஆனால், அப்படியெல்லாம் வேலையை பாதியில் விட்டு விட்டு வரக்கூடாது என ஜூலியட்டின் தாய் அவருக்கு கூற்றிய அறிவுரையின் பேரில், வேலையை முடித்துவிட்டுத்தான் வீடு திரும்பியுள்ளார் ஜூலியட்.

மருத்துவக் கல்வி முடித்து, தான் வாழும் ஒன்ராறியோவுக்கே சேவை செய்யவேண்டும் என்பது ஜூலியட்டின் விருப்பம்.

ஆடம்பர செலவு செய்ய ஜூலியட்டுக்கு விருப்பம் இல்லை என்றாலும், படிப்பு முடிந்ததும் குடும்பத்துடன் உலகச் சுற்றுலா ஒன்றிற்குச் செல்ல விருப்பம் உள்ளதாம் அவருக்கு.