Reading Time: < 1 minute

கனேடிய இராணுவத்தின் துணைத் தளபதியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

லெப்டினென்ட் ஜெனரல் பிரான்சிஸ் ஆலன் பாதுகாப்பு படைகளின் துணைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் மெக்டொனால்ட் மற்றும் ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் ஆகிய இரு மூத்த கனேடிய இராணுவ அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு துறையின் விசாரணைக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய இராணுவத்தின் முதல் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினென்ட் ஜெனரல் பிரான்சிஸ் ஆலன் தற்போது பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் பணியில் உள்ளார்.

இந்நிலையில் கனடாவின் வரலாற்றில் முதன்முறையாக இராணுவத்தின் துணைத் தளபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது தெரிவித்தார்.