அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சாதனங்களிலிருந்தும் சீன செயலியான TikTok செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது.
இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள சி.என்.என். அறிக்கையின்படி, “டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும், டிக்டாக் செயலிக்கான தடை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனடா அரசு செயலகத்தின் கருவூல வாரியத்தின் அறிக்கையின்படி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்குவதில் இருந்து தடுக்கப்படும். மேலும் பயன்பாட்டின் தற்போதைய நிறுவல்கள் அகற்றப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
TikTok செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் இந்த தீர்மானத்தால் தமது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக TikTok செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இதேபோன்ற தடை அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் கனடா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.