Reading Time: < 1 minute

கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்ந்து வருவோர் பணிகளில் சேருவதற்கு உள்ள தடைகளை நீக்கும் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட உள்ளது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வெளிநாடுகளில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் கனடாவில் பணி செய்ய உரிமம் பெறுவது எளிதாகும் என ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது.

ஒருவர் கனடாவில் பணியாற்றவேண்டுமானால், கனடாவில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த சட்டம் நீக்கிவிடும். அத்துடன், கனடாவுக்கு புலம்பெயர்வதற்கும், வேலை செய்வதற்கும் தேவையானதாக இருக்கும் மொழித்தேர்வையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

WorldSkills Employment Centreஇல் மூத்த இயக்குநராக இருப்பவரும், புதிதகா கனடாவுக்கு வரும் பெண்களுக்கு உதவும் திட்டம் ஒன்றின் மேலாளருமான Magdalene Cooman என்பவர் கூறும்போது, ஆண்டுதோறும் திறமையானவர்களை நாம் இழக்கிறோம், கனடாவுக்கு திறன் வாய்ந்த தொழில் தெரிந்தவர்கள் பலர் வருகிறார்கள். ஆனால், அவர்கள் வேலையில் சேர எக்கச்சக்க தடைகள் உள்ளன என்கிறார்.

புதிதாக வருபவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி, கனடாவின் தொழிலாளர் தேவையும் சந்திக்கப்படாமல் இருக்கிறது என்கிறார் WorldSkillsஇன் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Mengistab Tsegaye.

ஆனால், ஒரு முக்கிய விடயம், புதிதாக அறிமுகம் செய்யப்படும் சட்டம், பொறியாளர்கள், ஆர்க்கிடெக்ட்கள், எலக்ட்ரீசியன்கள், அக்கவுண்டண்ட்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் எப்போது அமுலுக்கு வரும் என்பது இன்னமும் தெரியவரவில்லை. அந்த சட்டம் அமுலுக்கு வந்தாலும், அது மருத்துவர்கள், செவிலியர்கள் முதலான மருத்துவத் துறையில் பணிபுரிவோருக்குப் பொருந்தாது.

இந்த தொழிலாளர்களில் மருத்துவத் துறையினரை மட்டும் விட்டுவிட்டது பொருளாதாரத்துக்கு ஒரு பேரழிவு என நான் கருதுகிறேன் என்கிறார் Cooman.

ஆக, அவர்களையும் இந்த கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் புலம்பெயர்வோருக்கு உதவும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்.

Source: https://www.cbc.ca/news/canada/ottawa/ontario-changing-qualifications-foreign-trained-professionals-1.6220135