தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…
திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு வெற்றியை வழங்கியுள்ளார்கள்.
49 வயதாகும் ட்ரூடோ, மறைந்த தனது தந்தை Pierre Trudeauவுக்குப் பின் 2015ஆம் ஆண்டு முதன்முறையாக பிரதமரானார்.
பின்னர், 2019இல் நடைபெற்ற தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இருக்கைகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 170 இருக்கைகள் தேவை. ஆகவே, வெற்றி பெற்றாலும், ட்ரூடோ அரசு பெரும்பான்மை பெறவில்லை. அதேபோல், நேற்று நடைபெற்ற தேர்தலிலும் அதே 157 இருக்கைகளையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது லிபரல் கட்சி. அதாவது, இம்முறையும் பெரும்பான்மை பெறவில்லை ட்ரூடோவின் லிபரல் கட்சி…
இதற்கிடையில் மொன்றியலில் வெற்றியுரை ஆற்றிய ட்ரூடோ, மக்கள் தங்களை மீண்டும் பணிக்குத் திரும்ப அனுப்புவதையே இந்த வெற்றி காட்டுவதாக தெரிவித்தார்.
இந்த கொரோனா காலகட்டத்தைக் கடந்து பிரகாசமான ஒரு எதிர்காலத்துக்கு செல்லும்படி நீங்கள் எங்களை பணிக்குத் திரும்ப அனுப்புகிறீர்கள்.
உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அதற்குப் பின்பும் உங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். கனேடியர்களால் எந்த தடையையும் தாண்டிச் செல்ல முடியும், அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்ய இருக்கிறோம் என்றார்.
அத்துடன், ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வாக்களித்ததற்காகவும், லிபரல் குழுவினர் மீது வைத்த நம்பிக்கைக்காகவும், பிரகாசமான ஒரு எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் கனடாவுக்கு நன்றி. கொரோனாவுக்கெதிரான போராட்டத்தை முடிக்கப்போகிறோம். கனடாவை முன்னோக்கி அழைத்துச் செல்லப்போகிறோம், எல்லாருக்காகவும்… என்று குறிப்பிட்டுள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.