Reading Time: < 1 minute

கனடாவுக்கான விசா சேவைகளை இந்தியா இடைநிறுத்தியது ஏன் என்பது குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.

நான்கு சுவர்களுக்குள், தூதர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு, கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நம்புவதாக வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

அதைத் தொடர்ந்து இருதரப்பு தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனடாவுக்கெதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, கனடாவுக்கான விசா சேவைகளை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இடைநிறுத்தியது இந்தியா.

இந்நிலையில், கனடாவுக்கான விசா சேவைகளை இந்தியா இடைநிறுத்தியது ஏன் என்பது குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சரான S. ஜெய்ஷங்கர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி, பிரித்தானியாவின் லண்டனிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அத்துடன், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது தீவைப்பு முயற்சி ஒன்று நடந்தது. செப்டம்பரில், கனடாவிலுள்ள இந்திய தூதர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

ஆகவே, ‘எங்கள் தூதரக அதிகாரிகள் கனடாவில் பாதுகாப்பாக பணிக்குச் சென்று திரும்பும் ஒரு நிலைமை இல்லாமலிருந்தது. எங்கள் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளானார்கள். அவர்கள் பலவிதத்தில் அவமதிக்கப்பட்டபோது, கனடா தரப்பிலிருந்து அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆகவேதான் கனடாவுக்கான விசா சேவைகளை இடைநிறுத்தவேண்டியதாயிற்று’ என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சரான S. ஜெய்ஷங்கர்.

அந்த நேரத்தில், கனடாவில் பரவலாக, தெளிவாக வன்முறை காணப்பட்ட நிலையில், ஒரு அமைச்சராக, எங்கள் தூதரக அதிகாரிகளை ஆபத்துக்குள்ளாக்க என்னால் அனுமதிக்கமுடியாது என்னும் நிலைமை உருவானது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இன்று எங்கள் விசா சேவை வழக்கம்போல செயல்பட்டுவருகிறது என்றார் அமைச்சர் S. ஜெய்ஷங்கர்.