கனடா வரும் சர்வதேச பயணிகளை ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோவிட் 19 தொற்று நோய் கட்டுப்பாடுகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டாட்சி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் திட்டத்துக்குப் பதிலாக பொருத்தமான தனிமைப்படுத்தல் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இது தோல்வியுற்றால் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் இடங்களில் அவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஹோட்டல் தனிமைப்படுத்தல் முறைமை சிக்கலானது. கிட்டத்தட்ட 3,000 கனேடிய டொலர்களை சா்வதேசப் பயணிகள் தனிமைப்படுத்தலுக்காக மட்டும் செலவிட வேண்டியுள்ளது. அத்துடன், ஹோட்டல் தனிமைப்படுத்தல் முறைமையில் நிர்வாகச் சிக்கல்களும் ஏற்படுகின்றன.
விமானம் மூலம் வருவோருக்கு மட்டுமே ஹோட்டல் தனிமைப்படுத்தல் முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது. தரை வழியே வருவோருக்கு இந்த நடைமுறை இல்லை என்பதால் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. சிலர் ஹோட்டல் தனிமைப்படுத்தலை தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து தரை வழிப் பயணத்தை மேற்கொள்கின்றனர் எனவும் கூட்டாட்சி ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியமற்ற பயணிகளில் கனேடிய வருகையைத் தவிர்க்கும் நோக்கில் ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிகள் கடந்த பெப்ரவரியில் நடைமுறைக்கு வந்தன.
புதிய விதிகளின் பிரகாரம் கனடாவுக்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் தொற்று இல்லை என எடுக்கப்பட்ட பி.சி.ஆர். முடிவுகளை அவா்கள் சமர்ப்பிக்க வேண்டும். கனடா வந்து ஹோட்டல்களில் தங்கிய 3 நாட்களில் பின்னர் அவா்களுக்கு பி.சி.ஆர். செய்யப்படும். அதில் தொற்று உறுதி செய்யப்படாவிட்டாலும் கூட அவர்கள் தங்களது இருப்பிடங்களில் தனிமைப்படுத்திக்கொண்டு 8 நாட்களின் பின்னர் மற்றொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கு முகம்கொடுக்க வேண்டும்.
இதிலும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவா்கள் கனடாவுக்கு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.