கனடாவின் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக மீண்டும் சரிவடைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரம் உறுதியான வேலைவாய்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக வெளியான தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
ஜனவரியில் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தில் 6.7 சதவிகிதம் என பதிவாகியிருந்தது. மட்டுமின்றி, ஜனவரி மாதத்தில் மட்டும் 76,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் இந்த எண்ணிக்கை 91,000 என இருந்தாலும், தற்போதைய நெருக்கடியான சூழலில் 76,000 வேலைவாய்ப்புகள் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.
வேலையின்மை விகிதம் சரிவடைவது இது தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் என்றே கூறுகின்றனர். இருப்பினும், கனடாவில் தற்போது வேலையற்றவர்கள் எண்ணிக்கை 1.5 மில்லியன் என்ற உச்சத்தில் உள்ளது.
சமீபத்திய வேலைவாய்ப்பு வளர்ச்சி இருந்தபோதிலும், வேலையில்லாதவர்கள் பலர் வேலை தேடுவதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்வதை இது குறிப்பதாக கூறுகின்றனர்.
தடுமாறிய நிலை
பெரிய வட்டி விகிதக் குறைப்புக்கள் நுகர்வோர் செலவினங்களையும் வணிக முதலீட்டையும் அதிகரிக்கத் தவறியதால், கடந்த ஆண்டின் பெரும்பகுதியில் கனடாவின் பொருளாதாரம் தடுமாறிய நிலையிலேயே காணப்பட்டது.
இந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் வரி விதிப்புகள் அமுலுக்கு வரும் என்றால், கனடா வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு அதிக வேலையின்மை விகிதத்துடன் நீண்டகாலமாக பலவீனமாக காணப்பட்ட இளைஞர்கள் அல்லது 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு 1.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தப் பிரிவில் வேலையின்மை விகிதம் 14.2 சதவிகிதத்தில் இலிருந்து 13.6 சதவிகிதமாகக் குறைந்தது. நிரந்தர ஊழியர்களுக்கான சராசரி மணிநேர ஊதிய வளர்ச்சி 3.7 சதவிகிதமாக இருந்தது, இது டிசம்பரில் திருத்தப்பட்ட 3.8 சதவிகிதத்தில் இருந்து சற்று குறைவாகும்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.