கனடா முழுவதும் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வரும் நிலையில், ஒட்டாவா தீயணைப்புத் துறை திரையரங்குகள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
தேசிய தீத்தடுப்பு வாரத்தை முன்னிட்டு, ஒட்டாவாவில் உள்ள ‘லேண்ட்மார்க் சினிமாஸ்’ திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன் நான்கு வாரங்களுக்கு இந்த விழிப்புணர்வு விளம்பரம் திரையிடப்படவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஸ்டிட்ஸ்வில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், மெத்தையில் வைத்து சார்ஜ் செய்யப்பட்ட ‘பவர் பேங்க்’ ஒன்றின் லித்தியம்-அயன் பேட்டரி வெடித்துத் தீப்பிடித்தது.
இதனால் சுமார் 750,000 கனடிய டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டு அந்தக் குடும்பம் வீட்டை இழந்தது. இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்தே இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.
“திரையரங்கில் படம் பார்க்க அமர்ந்திருக்கும் மக்கள் தங்களது தொலைபேசிகளில் கவனம் செலுத்தாமல், மிகப்பெரிய திரையில் காட்டப்படும் இந்த ஆபத்து குறித்த செய்தியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்” என ஒட்டாவா தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் நிக் டெஃபாசியோ தெரிவித்துள்ளார்.
மொபைல் போன்கள், லேப்டாப்கள், மின்சார மிதிவண்டிகள் மற்றும் பவர் டூல்ஸ்கள் எனப் பலவற்றிலும் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சான்றளிக்கப்படாத அல்லது தரமற்ற பேட்டரிகளைப் பயன்படுத்துவதே அதிக ஆபத்தை விளைவிப்பதாக இது குறித்து ஒட்டாவா தீயணைப்புப் படைத் தலைவர் போல் ஹட் கூறியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.