Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோவில் ரயில் பாதையொன்றில் சிக்கிய கார் ஒன்றில் பயணம் செய்த நான்கு பேரை மீட்ட ரீ.ரீ.சீ பணியாளர் ஒருவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரயில் காரில் மோதுவதற்கு முன்னதாக, விரைந்து செயற்பட்டு காரில் சிக்கியிருந்த நான்கு பேரையும் பாதுகாப்பாக குறித்த பணியாளர் மீட்டுள்ளார்.

ஸ்காப்ரோவின் பின்ச் அவன்யூ மற்றும் கென்னடி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இருந்த ரயில் கடவையில் பயணித்த போது திடீரென வாகனம் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பாதையில் ஆபத்தான நிலையில் கார் ஸ்தம்பித்து நிற்பதனை அவதானித்த ரீ.ரீ.சீ பஸ் சாரதி, இறங்கிச் சென்று தனது உயிரை பணயம் வைத்து காரில் பயணித்த நான்கு பேரையும் மீட்டுள்ளார்.

ரயில் பாதையில் சிக்கிய நான்கு பேரும் காரின் உள்ளே இருப்பது பாதுகாப்பானது என கூறிய போதிலும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினை விளக்கி அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

குறித்த நான்கு பேரும் காரை விட்டு வெளியேற வந்து பஸ்ஸில் ஏறி இரண்டு நிமிடங்களில் GO ரயில் காரில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிஜ ஹீரோவாக மாறி உயிர்களை காப்பாற்றிய துணிகர செயல் குறித்து ரீ.ரீ.சீ சேவை டுவிட்டர் மூலம் குறித்த சாரதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.