கனடாவின் லவால் நகரில் இடம்பெற்ற கோரக் கார் விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லவாலின் ‘செயிண்ட்-தொரோதே’ பகுதியில் அமைந்துள்ள ‘செயிண்ட்-மார்ட்டின் பூலேவார்ட் வெஸ்ட்’ வீதியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
காரைச் செலுத்திய 35 வயதுடைய பெண் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரில் பயணித்த உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் அவரது இரண்டு தோழிகள் ஆகிய மூன்று சிறுமிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டதற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்து லவால் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.