கனடா முழுவதும் கொவிட் தொற்று நோய் தீவிரமடைந்து மீண்டும் மருத்துவமனைச் சேர்க்கைகள் வெகுவாக அதிகரித்துவரும் நிலையில் பைசரின் பாக்ஸ்லோவிட் (Paxlovid) வாய்வழித் தடுப்பு மருந்துக்கு விரைவாக அங்கீகாரம் வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கொவிட் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக பல்கலைக்கழக மருத்துவமனைகளின் வலையமைப்பு (UHN) தலைவரும் ரொரன்டோ மருத்துவமனை தலைமை நிர்வாகியுமான டாக்டர் கெவின் ஸ்மித் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேறு பல நாட்பட்ட நோயாளிகள், மோட்டார் வாகன விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்பட்டோர், மாரடைப்பு காரணமாக வரும் அவசர நோயாளிகள், பக்கவாதம் மற்றும் அனைத்து வகையான பிற அவசர நோயாளிகளையும் நாங்கள் பராமரிக்க வேண்டியுள்ளது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மேல் பல்கலைக்கழக மருத்துவ வலையமைப்பின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் தினசரி 50 முதல் 100 வரையான சுகாதார பணியாளர்களும் கொவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் நிலைகளால் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் செல்லவேண்டி ஏற்படுவதாகவும் டாக்டர் கெவின் ஸ்மித் கூறினார்.
இதனால் நோயாளிகளை தொடர்ந்து கவனிப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன எனவும் அவா் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் சுமைகளைக் குறைக்க பைசரின் வாய்வழித் தடுப்பு மருந்துக்கு விரைவாக அங்கீகாரம் வழங்குமாறு டாக்டர் கெவின் ஸ்மித் வலியுறுத்தினார்.
பைசரின் வாய்வழித் தடுப்பு மருந்தை 2,250 பேருக்கு வழங்கி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தவிர்ப்பதில் 89 வீதம் பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன், இந்தத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மத்தியில் கொவிட் இறப்புக்களும் பதிவாகவில்லை.
இந்நிலையில் பைசரின் வாய்வழித் தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவையை 10 இல் ஒன்றாகக் குறைக்க முடியும் என நம்புவதாகவும் பல்கலைக்கழக மருத்துவமனைகளின் வலையமைப்பு (UHN) தலைவரும் ரொரண்டோ மருத்துவமனை தலைமை நிர்வாகியுமான டாக்டர் கெவின் ஸ்மித் தெரிவித்தார்.
பைசர் நிறுவனம் தனது பாக்ஸ்லோவிட் கொவிட் வாய்வழித் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு அங்கீகாரம் கோரி கடந்த டிசம்பர் முதலாம் திகதி ஹெல்த் கனடாவிடம் விண்ணப்பித்தது. ஏற்கனவே அமெரிக்காவில் இந்த மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் ஹெல்த் கனடா இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
பாக்ஸ்லோவிட் கொவிட் வாய்வழித் தடுப்பு மருந்து குறித்த மேலதிக தரவுகளுக்கான காத்திருப்பதாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. இது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும்? என்பது குறித்து காலக்கெடுவை வழங்க முடியாது என ஹெல்த் கனடா செய்தித் தொடர்பாளர் மார்க் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.