கனடாவில் 1.5 மில்லியன் மக்கள் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புதிதாக வெளியான தரவுகளில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையும் கனடாவில் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் புற்றுநோய் சமூகம் என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தரவுகளில் குறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் மொத்த தரவுகளும் இதனால் வெளிவந்துள்ளது. கனடாவில் இதுபோன்ற ஒரு நீண்ட காலத்தின் அடிப்படையிலான தரவுகள் வெளியாவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் 1 மில்லியன் மக்கள் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கனடாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதுடன் மருத்துவமும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
இதனால் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயிர் பிழைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 25 ஆண்டுகளில் கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 1.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் ஐந்து முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு நோய் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டவர்கள் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, புற்றுநோய் பாதிக்கப்பட்டும், முறையான சிகிச்சைகளால் அவர்கள் உயிர் பிழைத்து வருவதாக தெரிவிக்கின்றனர். தற்போதும், 24 கனேடியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.