Reading Time: < 1 minute

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதவாறு கனடாவில் கடந்த ஆண்டு மிகக் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் பதிவாகியுள்ளது.

தொற்று நோய் நெருக்கடியால் புலம்பெயர்ந்தோர் வருகையில் ஏற்பட்ட பெரும் சரிவு, அதிகரித்த இறப்பு வீதம் ஆகிய காரணிகளின் மத்தியில் 1916 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் கடந்த 2020 ஆம் ஆண்டில் கனடாவின் மக்கள் தொகை 0.4 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இது 2019 ஆம் ஆண்டில் பதிவான சனத்தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ கால் பங்காகும்.

கனடாவின் சனத்தொகை வளர்ச்சியில் பெரும் பங்கை வகிப்பது புலம்பெயர்ந்தோர் வருகையாகும். கனடா சனத்தொகை வளர்ச்சியில் 2019-ஆம் ஆண்டு 86 வீத பங்கை புலம்பெயர்ந்தோர் வருகையே ஈடு செய்தது.

ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் 2020 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 0.4 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டது. 1917 ஆம் ஆண்டிலிருந்து ஒன்ராறியோவில் பதிவான மிகக் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் இதுவாகும்.

1874-ஆம் ஆண்டுக்குப் பின்னர் லிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிகக் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடாரில் கடந்த ஆண்டு மக்கள் தொகை 0.6 சதவீதம் குறைந்துள்ளது.

தொற்று நோயால் புலம்பெயர்ந்தோர் வருகையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே கனடாவின் சனத்தொகை வளர்ச்சி வீதம் பாரியளவில் குறைவதற்கான முக்கிய காரணயாக அமைந்ததாக கனடா புள்ளிவிபரவியல் துறை தெரிவித்துள்ளது.

2016 முதல் கனடாவில் சனத்தெகை வளர்ச்சியில் முக்கால்வாசிக்கும் மேலான பங்கை புலம்பெயர்ந்தோர் வருகையே ஈடு செய்துவருகிறது.

இது 2019 ஆம் ஆண்டில் சனத்தொகை வளர்ச்சியில் 85.7 வீத பங்கை புலம்பெயர்ந்தோர் வருகை ஈடு செய்தது.

கோவிட்19 தொற்று நோயை அடுத்து 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கனடா எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பேணி வருவதால் கடந்த ஆண்டு ஒட்டுமொத்த சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் புலம்பெயர்ந்தோர் வருகை 58 வீத பங்கைக் கொண்டிருந்தது.

கனடாவில் கடந்த ஆண்டு 3 இலட்சத்து 41 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் வருகை எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு இலட்சத்து 87 ஆயிரம் பேரே குடியேறினர்.

இது 1998-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடா வந்த மிகக் குறைந்த புலம்பெயர்ந்தோர் தொகையாகும். அத்துடன், 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சரிபாதி குறைவானதாகும்.

இதேவேளை, கடந்த ஆண்டு கனடாவில் இதுவரை இலலாதளவு மிக அதிக இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 300,000 க்கும் அதிகமான இறப்புகள் கனடாவில் பதிவாகின.

கடந்த ஆண்டு பதிவான 20 இறப்புக்களில் ஒன்று கொரோனா தொற்று நோய் காரணமாக இடம்பெற்றது என கனடா பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.