Reading Time: < 1 minute

கனடாவில், மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அதனால் ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பலியான பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமையன்று, இரவு 8.10 மணியளவில், ஒன்ராறியோவிலுள்ள Clarington என்னுமிடத்தில், மதுபானக்கடை ஒன்றில் ஒருவர் திருட முயல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அந்த நபரைப் பிடிக்க முயல, அவர் வேன் ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளார்.

அவர் தவறான திசையில் செல்ல, பொலிசாரும் அவரை துரத்தியுள்ளார்கள். அவர்கள் முரட்டுத்தனமாக பொலிஸ் வாகனத்தை இயக்கியதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், கார் ஒன்றில், முறையே 60 மற்றும் 55 வயதுடைய ஒரு தாத்தா பாட்டியும், அவர்களுடைய பேரப்பிள்ளையான ஒரு கைக்குழந்தையும் பயணித்துக்கொண்டிருக்க, பொலிசாரால் துரத்தப்பட்ட வேன், இந்தக் கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில், அந்த தாத்தா பாட்டி, அந்த கைக்குழந்தையுடன், அந்த சந்தேக நபரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் அந்த சந்தேக நபரை துரத்திச் சென்றது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால், சந்தேக நபர் ஒருவர் பயணிக்கும் வாகனம் ஒன்றை பொலிசார் துரத்தும் முன், அந்த வாகனத்தைத் துரத்துவதால் பொதுமக்களுக்கு அபாயம் உள்ளதா என்பதை தீர்மானிக்கும் முன் பொலிசார் வாகனம் ஒன்றைத் துரத்தக்கூடாது என விதி உள்ளது.

ஆனால், பொலிசார், அதுவும் போக்குவரத்துக்கு எதிர் திசையில் செல்லும் வாகனத்தைத் துரத்தியுள்ளனர். அதுவும், அந்த நபர் மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகம் மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், நான்கு உயிர்கள் பலியாகும் வகையில் பொலிசார் நடந்துகொண்ட விதம் சரியா என கேள்வி எழுந்துள்ளது.